என்னுடைய அம்மா திருமதி.ரத்னமணி சாமுவேல்ராஜ் அவர்களின் வாழ்க்கை மற்றும் ஊழியம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி இங்கே காணலாம்.
முதலாவது ஒரு பெண் மற்றும், ஒரு ஊழியர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார்கள்.
- தனது குடும்பத்திற்கு
- தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு
- தனது திருச்சபைக்கு
- தனது ஊருக்கு / பிற மக்களுக்கு (நாட்டிற்கு)
- தனிப்பட்ட வாழ்க்கை
05.06.1932ம் ஆண்டு இடையன்குடியில் (திருவெல்வேலி மாவட்டம்) பாலையா மற்றும் பாக்யா அம்மாவின் தம்பதியரின் மூன்றாவது மகளாக பிறந்தவர்தான் எனது அம்மா திருமதி ரத்தினமணி சாமுவேல்ராஜ் அவர்கள்
மூத்தவர் லேட் திரு.தர்மராஜ் (விஜயவாடா), இரண்டாவது லேட் திருமதி,ஜெபத்தாய் பால்ராஜ் (தூத்துக்குடி), மூன்றாவது எனது அம்மா திருமதி ரத்தினமணி சாமுவேல்ராஜ், நான்காவது லேட் எஸ்தர் டீச்சர் (திருமங்கலம்), ஐந்தாவது திரு.சாமுவேல் வாத்தியார் (Rtd. teacher, PKN School, திருமங்கலம்), ஆறாவது Late திருமதி தேவகிருபை செல்லத்துரை டீச்சர் (விருதுநகர்), கடைசியாக திரு.நவமணி (BELL PINS, பாளையங்கோட்டை). எனது அம்மாவின் 15 வது வயதில் அவரின் தந்தையும் தாயும் ஒரே வருடத்தில் மரித்து விட்டார்கள். ஆக அவரது மூத்த சகோதரர் திரு.தர்மராஜ் அவர்கள் முழு குடும்ப பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். எனது அம்மாவின் திருமணத்திற்குப் பிறகே அவர் திருமணம் செய்தார். பின்னர் எனது அப்பாவும், அம்மாவும் மற்றவர்களுக்கு (எஸ்தர் டீச்சர் தவிர) திருமணம் செய்து வைத்தனர். திருவாளர் தர்மராஜ் மாமா அவர்களுக்கு எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த நேரத்தில். அவர் இப்பொழுது நம்மை விட்டு சென்றுவிட்டாலும், அவரின் தியாகத்தின் பலன்கள் அவருடைய பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் சேர்வதாக.
1. தனது குடும்பத்திற்கு
எனது அம்மா, அப்பா (திரு.B.M.சாமுவேல்ராஜ் ஜான்) அவர்களுக்கு 1956ம் ஆண்டில் திருமணம் முடிந்தது. எனக்கு ஒரு அண்ணன் திரு. S.J.P.விஜயகுமார், பிறகு நான் S.பால் சுரேஷ்குமார், கடைசியாக எனது தம்பி திரு.S.J.S.பிரேம்குமார் ஆகிய மூவர் பிறந்தோம். மூவருக்கும் திருமணம் முடிந்து பேரக்குழந்தைகள் இப்பொழுது இருக்கின்றனர். எனது தம்பி மட்டும் 1996ல் மரித்துவிட்டான். எனது அம்மா 1988ம் ஆண்டு 9ம் தேதி மே மாதம் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். எனது அப்பாவும், நான் அவர்களின் பூர்வீக வீட்டில் இடித்து புதிய வீடு கட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். இப்பொழுது நாங்கள் எங்கள் ஐந்தாவது தலைமுறையாக அந்த வீட்டில்(15/34, “Rock-View”, Old Vilachery Road, Pasumalai, Madurai) இருக்கிறோம். இந்த வீட்டின் முதல் தலைமுறை எங்கள் தாத்தா (அப்பாவின் அப்பா) திரு.C.V.ஜான், ஓவிய ஆசிரியர் மற்றும் நமது CSI மதுரை முகவை திருமண்டல "சின்னம்" (Logo) வரைந்தவரும், பசுமலை தெய்வீக அன்பின் திருக்காட்சியின் "அரங்கசாலையை" அமைத்தவருமான பசுமலை பள்ளி ஓவிய ஆசிரியர். Please visit: http://sureshkumarsp.blogspot.com/2016/09/v-behaviorurldefaultvmlo.html or https://paulshumanmanagement-in.webnode.in/news/biography-of-c-v-john-drawing-master-pasumalai/
எனது அம்மா ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியையாக இருந்தாலும் தனது சொற்ப (1970s,1980s) வருமானத்தில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வாழ்த்தார்கள் என்பது நான் கண்ட உண்மை. ஒருவேளை தனது கடைசி காலத்தில் கேன்சர் வியாதியில் மரித்தாலும் கடைசிநாள் வரையில் மற்றவர்களுக்காக ஜெபம் செய்தது நான் அறிந்த உண்மை. நான் அநேக நாட்கள் அந்நேரத்தில் நினைத்ததுண்டு, இவர்கள் ஜெபம் செய்து பலருக்கு பல வியாதிகள், பிரச்சனைகள் தீர்கிறதே, ஆனால் இவர்களுக்கு ஏன் இந்த சோதனை என்று நினைப்பதுண்டு. ஆனால் ஆண்டவரின் செய்கைகளை நாம் நிதானிக்க முடியாது, கூடாது என்று பின்னால் அறிந்து கொண்டேன். மேலும் முக்கியமாக எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கும் 9 நாட்களுக்கு முன் அவர்கள் மரித்துவிட்டார்கள், ஆனால் எனது அப்பா இதனால் திருமணம் தடைபெறக்கூடாது, அம்மா இருக்கும் போதே ஏற்பாடு பண்ணியது என்று அதை நடத்தினார். எனது அம்மா சில வேளைகளில் கூறுவதுண்டு " FOR CHRISTIANS, DEATH IS NOT SADNESS, BUT GLADNESS”. இந்த வாசகத்தை அவர்கள் கல்லறையிலும் காணலாம்.
வீட்டில் பிள்ளைகள் மூவரும் வாலிப வயதை அடைந்த போது, நாங்கள் வீட்டில் விளக்கு போடும்முன் வீட்டிற்று வர வேண்டும். இரவு குடும்ப ஜெபம் செய்துவிட்டுத்தான் இரவு உணவு. அதன்பின் படித்து விட்டு நாங்கள் மூவரும் தூங்க சென்று விடுவோம். ஆனால் அதின் பின்னும் எனது அம்மா ஜெபம் செய்வதை நாங்கள் அநேக நாட்கள் பார்த்திருக்கிறோம்.
எனது அம்மாவின் சகோதரிகள் மற்றும் சில சகோதரிகள் பல வேளைகளில் இரவு ஜெபம் செய்வது வழக்கம். இரவு எப்பொழுது தூங்கவார்கள் என தெரியாது. சில நேரங்களில் இடையில் எழுந்திருக்கும் போது முழங்காலில் நிற்பது தெரியும். எனது அம்மா தீர்க்கதரிசனம் சொல்லுவது வழக்கம் ஆக, நான் பொதுவாக பாவத்திற்கு விலகி அந்த நாட்கள் வாழ்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசனத்தில் தெரிந்து விடும் என்று. அநேக முறை வீட்டிற்கு வரும் நபர்கள் அவர்தம் முகத்தைப் பார்த்தே இவர் நல்லவர், இவர் சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள்.
காலையில் எங்கள் ஐந்து பேருக்கும் சமையல் செய்துவிட்டு காலை சாப்பாடு ஒரு காப்பி மட்டும் பல நேரங்களில் குடிப்பது வழக்கம். சாயங்காலம் வந்து தான் இரவு சமையல் செய்து எல்லோரும் சாப்பிடுவோம். மதியம் சாப்பிடுவதே இல்லை என பிற்பாடு அறிந்தேன்.
எனது அப்பா பல நேரம் கோபப்படும் போது அவர்களை சாந்தமாக இருந்து வார்த்தைகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வார். அந்த அளவு உளவியல் தெரிந்தவர் எனது அம்மா. ஆனால் பல நேரங்களில் வீட்டு வேலைகள் 99% எனது அம்மாதான் பார்ப்பது வழக்கம். இரவு அப்பா பள்ளியில் "tuition" எடுத்துவிட்டு நாங்கள் 9.30 மணியளவில் தூங்கிய பின்னர்தான் வருவார்கள். அவர்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு அதன்பின்தான் அவர்கள் தூங்க செல்லுவார்கள். ஆனால் அதிகாலை 4.00 மணி அளவில் முதலில் எழுவதும் அவர்கள் தான்.
மேல்வேலைக்கு ஆள் இருந்தும் சமையல் வேலை செய்வது அம்மாவே. நாங்கள் மூவரும் ஆண்களாக இருந்தாலும் பல நேரங்களில் சமையல் ஆள் வராத நாட்களில் பாத்திரம் கழுவுதல், மசாள் அம்மியில் அரைத்தல், கடைக்கு செல்லுதல், அடுப்பு பார்த்துக் கொள்ளுதல், வீட்டைக் கூட்டுதல் போன்ற காரியங்களில் அம்மாவிற்கு உதவி செய்வோம்.
அவர்கள் எங்களின் சரீரப்பிரகாரமான தாய் மட்டுமல்ல , ஆவிக்குரிய தாயும் அவர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவரின் கடிந்து கொள்ளுதல் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல இருக்கும்.
I தீமோத்தேயு 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
I தீமோத்தேயு 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும்.
2. தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு
அவர்கள் வாழ்க்கையில் எதைக் குறித்தும் பயப்பட்டதை நான் பார்த்தது இல்லை. ஆனால், பாவத்தைக் குறித்தும், பாவம் செய்பவர்களைக் கண்டாலும் வருத்தப்படுவார்கள். ஏனெனில் பயம் வரும்போது நமது கால்கள் தள்ளாடுகின்றன. அவர்கள் கால்கள் தள்ளாடுவதை நாங்கள் பார்த்தது இல்லை. ஆள் சித்து உருவமாக இருந்தாலும் அவர்கள் மனதில் எந்த கலக்கவும் பயமும் இருந்தது இல்லை., உடல் சோர்வு மட்டும் இருக்கும். உதாரணமாக மனிதர்களைக் கண்டோ, விலங்குகளைக் கண்டோ, பேய் , பிசாசு, பில்லிசூனியம் போன்ற துர் கிரியைகளைக் கண்டோ பயப்படவே மாட்டார்கள். எந்த பெரியவர்களிடமும், அரசியல் வாதியோ, அரசாங்க அதிகாரியோ, உயர் அதிகாரியோ அவர்களை கனம் பண்ணுவார்களே தவிர பயப்பட மாட்டார்கள். இதற்கு பல உதாரணங்களை நான் கூறமுடியும். அவர்கள் தாளாளர், தலைமை ஆசிரியர், DEO போன்றவர்களிடம் எப்பொழுதும் நல்ல ஆசிரியர் என்றே பெயர் எடுத்தவர்கள். காவல்துறை அதிகாரிகளிடம் எல்லாம் சாதாரணமாக பேசுவார்கள். உண்மைக்கு புறம்பாக என்றும் பேசியதை நான் கண்டதில்லை. அவரது “பாடக் குறிப்புகள் (Notes of Lesson)” கண்டு பாராட்டாத கல்வித் துறை அதிகாரிகளே கிடையாது எனலாம். அவ்வளவு அழகாகவும், படங்களுடன், தெளிவாகவும் இருக்கும். இடைநிலை (CSI Middle (மாடல்) School, பசுமலை மற்றும் CSI பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பசுமலை) ஆசிரியையாக இருந்தாலும் அவருக்கு பிடித்த துறை கணக்கு. ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாக எழுதுபவர்.
பயம் அறியா பரிசுத்தர்:
ஒருசமயம் எனது அம்மாவை அவருடன் வேலை செய்யும் ஆசிரியர் (ஒரு மருத்துவரின் தாயார்) ஒருவரின் வீட்டிற்கு கூட்டிச்சென்றார். அங்கு அவரின் வீட்டில் சாத்தானுடைய பல தொந்தரவுகள் நடைபெற்றன. வீட்டின் மேலிருந்து காரை பெயர்ந்து விழும் பொதுவாக அடுப்பில் சமையல் செய்யும் போது அதில் எல்லாம் விழும், திடீர் திடீர் என வீட்டின் மேலே பல கற்கள் விழுவது போல சத்தம் கேட்கும், பல வகையான அருவருப்பான சிறிய பூச்சிகள் வீட்டின் அனைத்து அறைகளிலும் நிறைய இருக்கும். பல நாட்கள் அவர் பலரின் முயற்சியால் முயன்றும் முடியவில்லை. எனது தாயார் மூன்று நாட்கள் தொடர்ந்து மதியம் சாப்பாடு இடைவேளையில் வீட்டிற்கு சென்று உபவாசம் இருந்து ஜெபம் செய்து அந்த தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைத்தது. இப்படி அநேகர் வீடுகளுக்கு சென்று விடுதலை அடைய செய்துள்ளார்கள். அவர்களின் மந்திரம் "இயேசுவின் நாமம் ஜெயம், இயேசுவின் இரத்தம் ஜெயம், இயேசுவின் நாமம் ஸ்தோத்திரம், இயேசுவின் இரத்தம் ஸ்தோத்திரம்".
வாரத்தில் பல நாட்கள் பள்ளி குழந்தைகளின் வட்புறுத்தலின் பெயரில், பசுமலை அருகில் உள்ள, அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, கிருஸ்ணாபுரம் போன்ற பல இடங்களுக்கு அந்த குழந்தைகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்தம் குடும்பத்திற்காக ஜெபம் செய்வது வழக்கம். நான் கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது சுமார் 6 மணி அளவில் அந்த குழந்தைகளே அவர்களை பசுமலைக்கு வந்து விட்டுச் செல்வது வழக்கம்.
மேலும் அவர் பள்ளி மதிய இடைவேளை நேரத்தில் நான் அவர்களை பல நாட்கள் (அருகில் உள்ள ஆண்கள் பள்ளியில் தான் நான் படித்துக் கொண்டிருந்தேன்) பார்க்க சென்றால் பார்த்து பேசுவது மிகவும் கடினம். ஏனெனில், அவர்கள் வகுப்பறையில் பல மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நின்று வேதம் படித்து அவர்களுக்கு விளக்கி, அவர்கள் குடும்ப நன்மைக்காக ஜெபம் செய்வது வழக்கம். வகுப்பு வெளியிலும் பிள்ளைகள் இருப்பார்கள். பின்னர் கேள்விப்பட்டேன், அவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டதே இல்லை என. முக்கியமாக வகுப்பு ஆரம்பிக்கு முன்பாக ஜெபம் செய்துவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள்.
ஒருநாள் நானும் எனது தம்பியும் எனது அம்மாவுடன் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சாக்கடை இருக்கிறது (திரு,ஜான் நல்லையா அவர்கள் வீட்டின் அருகில் -இப்பொழுது திரு.அருண் சாலொமோன் வீடு). அங்கே திரு.குப்பையாண்டி என்பவறின் மகன் அப்பொழுது அவனுக்கு ஐந்து வயது இருக்கும், அந்த சாக்கடையில் மேல் உள்ள பாலத்திலிருந்து விழுந்து விட்டான். அதை சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எனது அம்மா எனது தம்பி கையை விட்டு விட்டு ஓடி அந்த சாக்கடையில் இறங்கி அவனை வெளியில் எடுத்தார்கள். அவன் உடம்பு முழுவதும் புழுவாகவும், சாக்கடையாகவும் இருந்தது. அவனை அப்படியே கூட்டிக் கொண்டு அருகில் உள்ள அடிகுழாய்க்கு அழைத்துச் சென்று அவனைக் குளிப்பாட்டி விட்டு பிறகு எங்களைக் கூட்டிக் கொண்டு அவர்களும் பள்ளிக்கு சென்றார்கள். பல ஆண்கள் இருந்தாலும் அந்த இடத்தில் அவர்களின் துணிவு என்னை இன்றும் மெய் மறக்கச் செய்கிறது.
அதேபோல பாம்பு, தேள், பூரான், ஆகிய எந்த பிராணிகளையும் கண்டு பயந்ததே இல்லை. அவர்கள் எப்பொழுதும் காலை 4.00 மணி அளவில் வேதம் வாசித்து, ஜெபம் செய்து சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் ஒரு நாள், காலை அவர்கள் வழக்கம் போல எங்கள் வீட்டு வெளியில் (1980 களில்) மூலையில் மாட்டுக் கொட்டைக்கு அருகில் இருக்கும் பாத்ரூமிற்கு காலை சுமார் 4.30 மணிக்கு சென்றபோது ஒரு பாம்பை சின்ன குச்சியால் அடித்து கொன்றார்கள். அதை காலை 7.00 மணிக்கு எங்களிடம் கூற நாங்கள் சென்று பார்த்த பொது அதிர்ச்சி, அது ஒரு 4 அடி கருநாகம், அவர்கள் அடித்த குச்சி ஒரு முருங்கை குச்சி அதுவும் இரண்டாக உடைந்து கிடந்தது. இதைப் போல அநேக பாம்புகளை அவர்கள் அடித்திருக்கிறார்கள்.
எங்கள் வீட்டில் எப்பொழுதும் பூனை மற்றும் நாய் இருக்கும். அவை எப்பொழுதும் அவர்களையே சுத்தி சுத்தி வரும். ஒரு பொமரேனின் நாய் "டாமி" எங்கள் அம்மா இறக்கும் போது எங்கள் வீட்டில் இருந்தது. அது மருத்துவர்கள் அல்லது தாதிகள் வீட்டின் வந்து ஊசி செலுத்தும் போது அவர்களை விடாது. அந்த டாமி, அவர்கள் இறந்ததும் நான்கு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் அவர்கள் சேலையின் மேல் (சேலை மேலே கொடியில் இருந்தாலும் இழுத்துப் போட்டு) படுத்துக்கிடைக்கும். பின்னர் வேறு இடத்திற்கு மாற்றிய பிறகும் ஒரு வாரத்தில் இறந்ததாக தெரிந்தது. மனிதர்களும் மட்டுமல்ல விலங்குகளிடமும் அன்பாக இருப்பவர் எனது அம்மா.
இன்றும் அநேகர் எனது அம்மா மூலம் ஆண்டவரை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அவரைப் போல ஆண்டவருக்காக முடிந்த ஊழியம் செய்ய முயற்சி செய்கிறார்கள் என இப்பொழுது கேள்விப்பட்டேன். சகோதரர் நெல்லை குமார் அவர்கள் ஒரு சமயம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற போது, ஒரு சகோதரி எனது அம்மாவைக் குறித்து கூறியது ஞாபகம் வருகிறது “தம்பி நெல்லை குமார் சொன்னது, "பெரியம்மாவை அந்த சகோதரி ஒரு குணசாலியான ஸ்திரி என்றும் ஒரு முன் மாதிரியான, நல்ல டீச்சர் என்றும், ஆவிக்குரிய காரியங்களில் நடத்தினவர்கள் என்றும் கூறினார்கள்". அரசாங்கம் ஒருவேளை நல்லாசிரியர் விருது கொடுக்க வில்லை என்றாலும் இதைப் போல பல மாணவிகள், சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கூறுவது தான் நல்ல விருது என்று நான் கருதுகிறேன். ஆனால் எனது தந்தை late திரு.B.M.சாமுவேல்ராஜ் ஜான் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்.
அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாடம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த காரியங்களில் அதிக கண்டிப்புடன் இருந்தார். ஒரு அடி அளவு ஸ்கேல் (One feet scale) கொண்டுதான் அடிப்பார். கையில் அல்லது முட்டிக்கு கீழ் தட்டுவார். அவரின் எழுத்து மிகவும் அழகாக இருக்கும். "என்று ஒரு மாணவனைக் கண்டிக்கும் உரிமையை ஆசிரியர் இழந்தாரோ அன்றே அந்த மாணவன் தன வருங்காலத்தை இழந்தான்" என்பது உலக மொழி. ஆகவேதான் அவரிடம் பயின்ற மாணவ, மாணவியர் இன்றும் நல்ல நிலையில் அல்லது நல் வாழ்க்கையை நடத்துவது கண்கூடான உண்மை.
இதுதான் எனது அம்மா …..நீதிமொழிகள் 31 - 28. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: 29. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
- தனது திருச்சபைக்கு
திருச்சபையில் அப்பா எனக்குத் தெரிந்த காலங்கள் எல்லாம் "PC" கமிட்டி அங்கத்தினராக இருந்தார். ஆக அவரது ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்று வருவது எனது அம்மாவின் ஒரு பெரிய பங்கு. அவர்கள் ஞாயிறு சாயங்காலம் மற்றும் (Lenten) தவசு நாட்களில் வாரம் ஒருமுறை அதிகாலையிலோ, மாலையிலோ ஆண்டவரின் வார்த்தையை பகிர்ந்து கொள்ளுவது வழக்கம். மேலும் தெய்வீக அன்பின் திருக்காட்சியின் ஊழியத்தில் அவர்களின் பங்கு பெரியது. Volunteerஆக(தன்னார்வ தொண்டு) இருந்து அவர்களில் ஒழுங்கு செய்ய மட்டுமல்ல, தெரிந்தவரின் பிள்ளைகள் என்றாலும் தவறை தட்டிக் கேட்பார், ஜெப உதவி தேவை என்றால் அவர்களுக்கு ஜெபம் செய்து ஆலோசனை வழங்குவது வழக்கம். அவர்களின் ஒழுக்கம் மற்றும் நேர்கொண்ட வாழ்க்கை முறை அநேகரை மாற்றியது என்று கூறினால் அது மிகை ஆகாது. அவர்களிடம் தவறு கண்டுபிடிப்பது முடியாத காரியம்.
திருச்சபையில் எனது தந்தையின் ஊழியத்தில் நேரம் காலம் அதிகமானாலும் எனது அம்மா அதை அறிந்து நடந்து கொள்ளுவார்கள். மேலும் அந்த காலத்தில் திருச்சபைக்கு வரும் வெளி ஊர்களில் இருந்து வரும் பெரும்பாலான ஊழியர்கள் எங்கள் வீட்டில் தங்குவது வழக்கம் அல்லது ஓன்று அல்லது இரண்டு நேரம் சாப்பாடு பகிர்ந்து கொள்ளுவது வழக்கம். அவர்களில் எனக்கு தெரிந்த சிலர், பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார், Dr.புஸ்பராஜ், சகோ.D.T.ராஜா, சகோ .கிப்ட்ஸ்ன் டேனியல், Bro.ஜான் சாலமோன் போன்றோர். அவர்களை உபசரிப்பதில் நாங்கள் குடும்பத்தோடு செய்வது வழக்கம். எங்க அம்மாவின் சமையல் மற்றும் விருந்தோம்பல் நன்றாக இருக்கும் என பலர் கூறியிருக்கிறார்கள். வீட்டிற்கு வரும் நபர்களுக்கு காபி, டீ, மற்றும் திண்பண்டங்கள் கொடுப்பது எப்பொழுதும் வழக்கமான ஓன்று.
தனது மாத வருமானத்தில் 10/1 பங்கு மட்டுமல்ல தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர்கள். உதாரணத்திற்கு தினமும் சமையல் செய்யும்முன் ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு பையில் போட்டுவைப்பார், அடுத்த மாதத்தில் இரண்டு சகோதரிகள் வருவார்கள், அவர்களுக்கு அதைக் கொடுப்பது வழக்கம். மேலும் அநேக ஊழியங்களுக்கு ஜெபிப்பதோடு கொடுக்கவும் செய்தார்கள். காணிக்கை மற்ற காரியங்களிலும் திருச்சபையின் ஒழுங்குபடி சரியாக செய்தவர்கள்.
திருச்சபை மக்கள் அநேகர் எங்கள் வீட்டிற்கு வந்து அவர்களின் குடும்பம் மற்றும் தனிவாழ்வின் நன்மைக்காக ஜெபம் செய்வது வழக்கம். மேலும் அவரிடம் நான் கண்ட மற்றொரு காரியம், அவர்கள் ஆலயத்திற்கு செல்லும் போது, வேதாகமம், பாட்டு புத்தகமும் இல்லாமல் செல்லவே மாட்டார். அதுமட்டுமன்றி ஆலயத்தில் முக்காடு போட்டுத்தான் இருப்பார்கள்.
- தனது ஊருக்கு / பிற மக்களுக்கு (நாட்டிற்கு)
எனது அம்மா BHARATH SCOUTS AND GUIDES (ஸ்கவுட்) என்ற இயக்கத்தில் இருந்தவர்கள், ஆகையால் சாலை விதியை பின்பற்றுதல், ஒழுக்கம், நேர் கொண்ட பார்வை ஆகியவைகளில் மிகவும் கவனமாக இருந்தவர்கள். தான் இருக்கும் இடத்தில் மட்டுமல்ல, தன் நிறுவனம் சார்ந்த இடத்திலும், திருச்சபை இடத்திலும், வீட்டிலும் சுத்தமாக இருக்கவேண்டும் எனவும், அதை அப்படியாகவும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களே விளக்குமாறு எடுத்து கூட்டுவார்கள், அடுத்தவரை எதிர்பார்ப்பது இல்லை.
பல SCOUT முகாம்களில் மாணவ, மாணவிகளுக்கு வெளி உலக அனுபவத்தை எப்படி ஒழுக்கமான முறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது என்று நடைமுறையில் சொல்லித்தந்தார் என்றால் அது மிகை ஆகாது.
எனது அம்மா மிகவும் அழகாக கோலம் போடுபவர் என்பது அநேகருக்கு தெரியாது. எங்கள் ஊரில் நடைபெறும் பொங்கல் விளையாட்டு விழாவில் ஒவ்வொரு வருடமும் கோலப்போட்டியில் ஒரு பரிசு கண்டிப்பாக பெறுவார். பொங்கல் என்றவுடன் அது மற்ற மத பண்டிகை என்று நினைக்காமல் தமிழர் பண்டிகை என்று ஓற்றுமையாக இருப்பதற்காக இதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்.
நான் ஒரு கிறிஸ்தவர் என்று எப்பொழுதும் கூறினதே இல்லை. அவர்கள் வாழ்க்கை மூலம், தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியவர். கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல, நமது வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு கலாச்சாரம். இதை ஒரு சாராருக்கு மட்டும் அடக்கி வைத்துக் கொள்ள கூடாது, இயேசு அனைவருக்கும் சொந்தம், அவர் கிறிஸ்தவர்களின் தெய்வம் மட்டுமல்ல என்பதில் 100% நடத்திக் காட்டியவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், ஏழைகளையும், பிணியாளிகளையும் மதம் மற்றும் ஜாதி வித்தியாசமின்றி நேசித்தவர் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளைப் போல பாவித்து அவர்களுக்காக ஜெபித்தவர் மற்றும் கொடுத்தவர்.
அவர் செந்தில் நர்சிங் ஹோம், மதுரை என்ற மருத்துவமனையில் Dr.தேவதாஸ் அவர்களிடம் சிகிச்சை பெறும்போது அருகில் உள்ள கட்டிலின் நோயாளிகளிடம் இயேசுவின் அன்பை பகிர்ந்து அளிப்பார். அவர்கள் ஏன் இப்படி சுகவீனத்தில் இருந்தார்கள் என்பதும் ஒரு உதவி செய்யும் போது என்று கேள்விப்பட்டோம். ஒரு வயதான பெண்மணி பசுமலை பேருந்து இறக்கத்தில் இறங்கும் போது அவர்கள் கையைப் பிடித்து இறக்கி விடும்போது ரோட்டிற்கும் மண்ணிற்கும் உள்ள பள்ளத்தில் கால் வைத்ததில் விழுந்து முதுகுத்தண்டு dislocation ஆனது என்று அறிந்தோம். அது பின் நாட்களின் கேன்சர் வியாதியாக மாறியது.
- தனிப்பட்ட வாழ்க்கை
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றவர்கள் குற்றம் எங்கே என்று தேடுதல் அளவில் மட்டுமே இருந்தது. அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களின் உடையும் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என செய்து காட்டியவர்கள். தான் போதிப்பதை தானே செய்தும் காட்டுபவர். எப்பொழுதும் துப்புரவாக, அழகாக, சரியாக ஆடை உடுத்துவார்கள். வீட்டிலும் வெளியிலும் அவர்களைப் பார்ப்பவர்கள் ஒரு தேவ கடாட்சமாகவே இருப்பதாக சொல்லுவார்கள். இரத்தினமணி டீச்சர் எப்பொழுதுமே SMART & CUTE என்றே சொல்லுவார்கள்.
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் மற்ற பெண்களிடம் இருந்து என்ன தனிப்பட்ட காரியம்/ குணாதிசயம் இவரிடம் அப்படி என்ன இருக்கிறது என்று. ஆம் இருக்கிறது, "அவர் யாரைப் பற்றியும் புறணி பேசவே மாட்டார், யாரைப் பற்றியும் கதை கேட்கவும் மாட்டார்". அதற்கு அவரிடம் வீணான நேரமே கிடையாது.
எந்த காரியத்திற்காக அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த இடத்தில் அந்த வேலையை மட்டுமே பார்ப்பார். பல scout கதைகளையும் , நயமுடனே, சிந்தனையை தூண்டும் விதத்தில், நகைச்சுவையுடன் கூறுபவர். வேதத்தில் உள்ள நிகழ்வுகளை புரியும்படி கூறுவதில் அவரை விட யாருமில்லை எனவே கூறலாம்.
இரக்கம் அவரின் பிறப்பிலே இருந்தது. அவரை யாரும் ஏமாற்றவேண்டுமெனில் அல்லது உணர்ச்சிவயப்படுகின்ற விதத்தில் பேசினாலே இருப்பதைக் கொடுத்து விடுவார். இதைவேண்டுமென்றால் அவரின் பலவீனம் என்றுகூட கூறலாம். மாணவிகளில் மிகவும் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வார் எப்பொழுதும்.
ஒருவேளை கடவுள் அவரின் உலக வாழ்க்கையை, கடவுளின் சித்தப்படி 09.05.1988ம் ஆண்டில் எடுத்துக் கொண்டார்.
II கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
புருசனுக்கு நல்ல மனைவியாக, பிள்ளைகளுக்கு நல்ல தாயாக, மாணவ-மாணவிகளுக்கு நல்ல ஆசிரியையாக, திருச்சபைக்கு நல்ல ஊழியராக, நாட்டிற்கு ஒரு நல்ல மனுஷியாக, கடவுளின் நல்ல பிள்ளையாக இருந்தவர் எனது அம்மா என்றால் அது மிகை ஆகாது.
I தீமோத்தேயு 2:9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், 10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். 11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
I தீமோத்தேயு 3:11 அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
No comments:
Post a Comment